பொங்கல் திருநாளான இன்று (15.01.2023) பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தும் ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஜனவரி 15, 16, ஆகிய 2 தேதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் பொங்கல் திருநாளான இன்று (15.01.2023) பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடத்துவது என்பது அந்த தேர்வில் தமிழர்கள் அதிகளவு கலந்துகொள்ள முடியாத நிலையை உள்ளது.
தமிழக இளைஞர்கள் ஏராளமானோர் வங்கிப் பணிகளில் சேர ஆர்வம் காட்டி வரும் நிலையில், பொங்கல் திருநாளான இன்று (15.01.2023) நடத்தப்படும் தேர்வானது அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 13,000 பேர் இந்த தேர்வை எழுதுவதற்காக விண்ணபித்திருந்தனர்.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு தேதியை உடனடியாக மாற்ற வேண்டும் என சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருமாவளவன், சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், செல்லக்குமார் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மேலும் இந்த விவகாரத்தில் தலையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசினார். ஆனால் பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் தேர்வு தேதியை மாற்ற முடியாது என ஒன்றிய அரசு கூறிவிட்டது.
இதுகுறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ள எம்.பி. சு.வெங்கடேசன், “கயமைத் தனத்தை கடைபிடிக்கிறது ஒன்றிய அரசு. தமிழர்களின் பண்பாட்டையும், உரிமையையும் அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது. தமிழர் விரோத பாஜகவை தமிழ்நாடு ஒரு நாளும் மன்னிக்காது” எனக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.