அமெரிக்காவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய பிரட் கவானா, செனட் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று உச்ச நீதிமன்றத்தின் 114வது நீதிபதியாக பொறுப்பேற்றார்.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த கென்னடி, சில மாதங்களுக்கு முன் தாமாக முன்வந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, பிரபல சட்ட நிபுணர் பிரட் கவானாவை இந்த நீதிபதி பதவிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, கவானா தங்களை 25 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று பெண்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது.
பிரட் கவானாவை நீதிபதியாக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கவானா மறுத்து விட்டார். எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து நீதிபதி மீதான குற்றச்சாட்டு பற்றி எப்பிஐ விசாரணை நடத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அதன்படி, கவானாவிடம் எப்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இது தொடர்பான அறிக்கை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற செனட் சபையில் கவானாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கவானாவுக்கு ஆதரவாக 50 வாக்குகளும், எதிராக 48 வாக்குகளும் கிடைத்தன.
இதையடுத்து, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர், 9 பேர் கொண்ட செனட் சபை குழு உச்ச நீதிமன்ற நீதிபதியாக கவானா நியமிக்கப்படுவதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 114வது நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட், கவானாவுக்கு அரசியலமைப்பு காப்புறுதி பிரமாணமும், ஓய்வு பெற்ற நீதிபதி கென்னடி பதவிப் பிரமாணமும் செய்து வைத்தனர்.