பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 3 உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பலரின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
‘பெகாசஸ் புராஜக்ட்’ என்ற பெயரில் தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடகங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், பல்வேறு பத்திரிகையாளர்கள், ஒரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தொடங்கி பல முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன.
இந்த பெகாசஸ் உளவு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும், ஒன்றிய அரசு இதில் விளக்க தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, சிபிஎம் கட்சியின் பிரிட்டாஸ், பிரபல வழக்கறிஞர் எம்எல் சர்மா, மூத்த பத்திரிகையாளர் என். ராம், மற்ற பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சார்பாக இந்த வழக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு இந்த வழக்கில் நேற்று (27.10.2021) தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில், “இந்த வழக்கில் மனுதாரர்கள் சிலர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பொது நல வழக்காக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் தங்கள் அந்தரங்கத்தை பாதுகாக்கும் உரிமை உள்ளது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்று.
நாம் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் டிஜிட்டலாக உள்ளது. இதனால் இதை பாதுகாப்பது அவசியம். நம்மை பற்றிய தகவல்கள் இணைய கிளவுடில் உள்ளது. இந்தியாவில் எல்லோருடைய தனிப்பட்ட உரிமைகளும், ரகசியமும் காக்கப்பட வேண்டும். மக்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தை அத்துமீறி பார்க்க கூடாது.
மக்களின் அந்தரங்க விஷயங்களில் தலையீடு நடக்கும் போது தேசிய பாதுகாப்பு என்பதை அரசு “ஃப்ரீ பாஸ்” போல பயன்படுத்த முடியாது. தேசிய பாதுகாப்பை அனைத்து பிரச்சனையிலும் காரணம் காட்ட கூடாது. இதை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. மக்களின் அந்தரங்க உரிமையை ஒட்டுக்கேட்பு பாதிக்கிறது.
பெகாசஸ் வழக்கில் ஒன்றிய அரசு வெளிப்படையாக எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. எனவே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 3 உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு விசாரணை நடத்தும்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி ரவீந்திரன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் நவீன் சவுத்ரி, டாக்டர் பிரபாகரன், டாக்டர் அஸ்வின் அணில் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யபட்டுள்ளனர். 8 வாரங்களில் இவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள்” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
கமிட்டியின் தலைவர் ஆர்.வி ரவீந்திரன் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பனியாற்றியவர். கர்நாடகாவில் வழக்கறிஞராக இருந்து பின்னர் அங்கு உயர் நீதிமன்ற நீதிபதியானார். இவர் 2004 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, 2005ல் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார்.
ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு, 1993 பாம்பே குண்டு வெடிப்பு வழக்கு, கிருஷ்ணா கோதாவரி நீர் பங்கீடு வழக்கு ஆகிய பெரிய வழக்குகளில் ஆர்.வி ரவீந்திரன் நீதிபதியாக இருந்துள்ளார். கமிட்டி தலைவருக்கு உதவியாக முன்னாள் “ரா” உளவு பிரிவு தலைவர் அலோக் ஜோஷி இருப்பார். ஜேஎன்யூ பல்கலையில் படித்து, பின்னர் ஐபிஎஸ் முடித்து இந்திய உளவு பிரிவான ராவில் தலைவாராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மற்ற உறுப்பினர்கள் டாக்டர் நவீன் சவுத்ரி சிறந்த கல்வி மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர். சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் பேராசிரியராகவும் மற்றும் டீனாகவும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், குஜராத்தில் பணியாற்றி வருகிறார்.
டாக்டர் பிரபாகரன் கேரளாவை சேர்ந்தவர். அமிர்தா விஷ்வ வித்யாபீடம், அமிர்தபுரி, கேரளாவில் சைபர் கிரைம் மற்றும் பொறியியல் பேராசிரியராக உள்ளார். அதேபோல் டாக்டர் அஸ்வின் அணில், இன்ஸ்டிடியூட் சேர் துணை பேராசிரியராக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் மும்பை ஐஐடியில் பணியாற்றி வருகிறார்.