பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் பேமெண்ட்ஸ் ஆப்பில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி இன்று (12.3.2022) உத்தரவிட்டுள்ளது.
இணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் பேமண்ட்ஸ்ன் கீழ் ஏராளமான வாடிக்கையாளர்கள் சேர்ந்து பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், பேடிஎம் பண பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கியின் விதிகளை முறையாக கடைப்படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து வங்கிகள் ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் அக்ரவால் இன்று (12.3.2022) வெளியிட்ட உத்தரவில், “பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வங்கியில் பல்வேறுவிதமான தணிக்கைகள் நடைபெற இருக்கின்றன.
பேடிஎம் நிறுவனமும் தகுதியான தகவல் தொழில்நுட்ப தணிக்கை நிறுவனத்தை அமர்த்தி நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஐடி நிர்வாகத்தையும் தணிக்கை செய்ய வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப தணிக்கையாளர்கள் அளிக்கும் அறிக்கைக்குப்பின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர் சேர்ப்பது குறித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கும்” என்று தெரிவித்துள்ளது.