பிரதமர் மோடி ‘சுயசார்பு இந்தியா’ குறித்து வலியுறுத்தி வரும் நிலையில், ‘சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலை’ சீனாவில் தயாரிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
ஹைதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலா கிராமத்தில் ஷம்ஷாபாத் விமான நிலையம் அருகே 216 அடி உயர ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜரின் 1000 ஆண்டுகள் பூர்த்தி ஆனதன் நினைவாக ரூ.1,200 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆஸ்ரம வளாகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது. மேலும் சர்தார் வல்லபாய் படேல் சிலை போன்று ராமானுஜரின் சிலையும் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது
‘சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் பயன்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி அடிக்கடி கூறும் ‘சுயசார்பு இந்தியா’ (ஆத்மநிர்பார்) திட்டத்தையும், சீனா தயாரித்த இந்த சிலையையும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில், “சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘புதிய இந்தியா’ சீனா நிர்பார் (சீன தயாரிப்பு) என மாறிவிட்டதோ?” என கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.