நீண்ட போராட்டத்திற்கு பிறகு மெரினா புரட்சி படத்துக்கு சென்சாரில் யூ சான்று கிடைத்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் மெரினா புரட்சி. இப்படத்தில் போராட்டத்திற்கு பின்னணியில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து புலனாய்வு பார்வையில் பேசப்பட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்சாருக்கு விண்ணப்பித்த நிலையில், 8 மாதங்கள் கழித்து உயர் நீதிமன்ற தலையீட்டின் கீழ் இப்படத்திற்கு சென்சார் கிடைத்துள்ளது. இதுகுறித்து, மெரினா புரட்சி படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறியதாவது, “ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு எப்படி தடை கொண்டு வந்தார்கள். அதற்கு தமிழ்நாட்டில் இருந்து யாரெல்லாம் உதவி செய்தார்கள். ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடைபெற்ற போராட்டம், அதை திசைமாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உள்ளிட்டவைகள் குறித்து தான் மெரினா புரட்சி படத்தில் பேசியுள்ளாம்.
முழுக்க முழுக்க ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையை மட்டுமே காட்டியுள்ளோம். ஆனால் இப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க ஒரு போராட்டமே நடத்த வேண்டியதாகிவிட்டது. இரண்டு முறை சென்சார் மறுக்கப்பட்டு, உயர் நீதிமன்ற தலையீட்டுக்கு பின்னர் 3வது முறை படம் பார்த்த சென்சார் குழு படத்துக்கு யூ சான்று வழங்கியுள்ளது.
அதுவும் கடந்த ஜனவரி மாதம் சென்சார் வழங்க ஒப்புக்கொண்டு, 3 மாதங்கள் தாமதப்படுத்தி, இப்போது தான் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த படத்தில் பீட்டா என்ற வார்த்தை வரவேக் கூடாது என சொல்லிவிட்டனர். அதேபோல் மத்திய அரசு என்ற வார்த்தை 18 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது.
உண்மையை சொல்ல வேண்டும் என்பது எனது போராட்டம். ஆனால் உண்மையாக இருந்தாரலும் அதை சொல்லக் கூடாது என்பது சென்சார் போர்டின் நிலைபாடு. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு படத்தை ரிலீஸ் செய்ய இத்தனை போராட்டங்கள் நடத்த வேண்டி இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னணியில் நடைபெற்ற சதி, அதில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்த நடிகர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழகக் கட்சியினர் என அனைத்து உண்மைகளையும் மெரினா புரட்சியில் பார்க்கலாம். இது ஒரு வழக்கமான சினிமாவாக இல்லாமல், ஜல்லிக்கட்டு போராட்டத்தை பற்றிய மலரும் நினைவாக இருக்கும்”, என இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறினார்.