தமிழ், மலையாள பட உலகில் கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஷகீலா, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, மலையாளத்தில் கவிர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானார். மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. பிறகு அதுபோன்ற படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

தமிழில் வெளியான ‘ஜெயம்’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அது அவருக்கு நல்ல வரவேற்பை வழங்கவே, தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படம் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் ஷகிலாவாக ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் மாதம் ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது வாழ்க்கையை குறித்து சமீபத்தில் பேசிய நடிகை ஷகீலா, எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. 15-வது வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகீலா என்றாலே ஆபாச நடிகை என்று முத்திரை குத்திவிட்டனர். குடும்பத்துக்காகத்தான் அந்த படங்களில் நடித்தேன். ஆனால் என் குடும்பத்தில் இருந்த ஒருவரே நான் சம்பாதித்த பணத்தை ஏமாற்றிவிட்டார்.

பல்வேறு தோல்விகளை சந்தித்த நான், பலமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. அவர் தலைமை வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர விருப்பமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.