தென் இந்தியாவில் முக்கிய சினிமா திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாசை, இந்தியாவின் பிரபல குழுமமான பி.வி.ஆர். சினிமாஸ் வாங்கி இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சத்யம் சினிமாஸ் 1974-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது வரை இந்தியா முழுவதும் எஸ்கேப், சத்யம் சினிமாஸ், சத்யம் எஸ் 2, பலாசோ சினிமாஸ் என பல்வேறு பெயர்களில் மொத்தம் 76 திரைகள் இயங்கி வருகிறது. இந்தியாவில் நவீன திரையரங்க கட்டமைப்பிற்கான முன்னோடியாகவும் எஸ்பிஐ திகழ்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் பீனிக்ஸ் மாலில் இருக்கும் சத்யம் நிறுவனத்தின் லக்ஸ் திரையரங்குகளை ஜாஸ் சினிமாஸ் வாங்கியது.
இந்நிலையில், இந்தியாவின் மெகா திரையரங்க நிறுவனமான எஸ்பிஐ சினிமாஸின் 77.1 சதவீத பங்குகளை பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் ரூ.850 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து 9 முதல் 12 மாதங்களுக்குள் எஸ்பிஐ சினிமாஸ் பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரிய திரையரங்க நிறுவனங்களுள் ஒன்றாக உள்ள பிவிஆர் சினிமாஸுக்கு 60 நகரங்களில் 630 திரைகள் உள்ளன. சத்யம் திரையரங்குகளை வாங்கியதன் மூலம், இந்தியாவில் பி.வி.ஆர். திரையரங்குகளின் எண்ணிக்கை 706-ஆக உயர்ந்துள்ளது. 2020-க்குள் 1000 திரையரங்குகளைக் கடப்பதே எங்கள் நோக்கம் என்று பி.வி.ஆர். குழுமத்தின் சேர்மன் அஜய் பிஜ்லி தெரிவித்திருக்கிறார்.