கடந்த 25 -ம் தேதி, தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திருச்சி தாஜ் மண்டபத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அந்தக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட விளம்பர பதாகையில் பா.ம.க கட்சியின் பெயர் விடுபட்டதால், அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “அம்மாவிற்குப் பிறகு எங்களுக்குக் கிடைத்திருக்கும் நம்பிக்கை அண்ணியார்தான். கூட்டணிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததிலிருந்து தே.மு.தி.க வேறு கூட்டணிக்குப் போகாது என நம்பிக்கையோடு இருந்தோம்.
அதன்படியே, கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றதைப்போன்று, தே.மு.தி.க தற்போது எங்களுடன் இணைந்துள்ளது” என பிரேமலதாவை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பேசியதைக் கண்டு அ.தி.மு.க-வினர் அதிதிகில் திகில் அடைந்தனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எம்.ஜி.ஆர் பாடல்களை மட்டுமே விஜயகாந்த் பாடுவார். அதுவும், “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது…” என்கிற பாடலைத்தான் விஜயகாந்த் விரும்பிப் பாடுவார்” என சிவாஜிகணேசன் நடித்த ‘பச்சைவிளக்கு’ திரைப்படத்தின் பாடலை எம்.ஜி.ஆர் பாடல் எனப்பாடி ஷாக் கொடுத்தார்..
அதனை அடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரமலதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரேமலதா, “அமைச்சர் விஜயபாஸ்கரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் எனச் சொல்ல, அங்கு கூடியிருந்த விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க-வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனையடுத்து நிலைமையைப் புரிந்துகொண்ட பிரேமலதா, தி.மு.க தலைவர் விஜயபாஸ்கரை அப்படி பட்டப்பெயர் வைத்து அழைப்பார் என்றும், பதிலுக்கு நாமும் ஸ்டாலினுக்கு ஒரு பட்டப் பெயர் வைப்போம் எனப் பேசிவிட்டு நைசாக நகர்ந்தார்.
பிரேமலதாவின் இந்தப் பேச்சில் கடுப்பான அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டுமொத்த செலவையும் தானே பார்ப்பதாகவும், தேவையில்லாமல் பிரேமலதா புதுக்கோட்டையில் அப்படி பேசிவிட்டுச் சென்றுள்ளார் என்கிற கோபத்தில் இப்போதும் உள்ளாராம்.
நிலைமை இப்படி இருக்க, பிரேமலதா விஜயகாந்த் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி டி.வி.எஸ் டோல்கேட், காந்தி மார்க்கெட், மலைக்கோட்டை வழியாக பிரசாரம் மேற்கொண்டார்.
அவரின் வருகைக்காக காலை 8 மணியிலிருந்தே தே.மு.தி.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காத்துக் கிடந்தார்கள்.
ஆனால், மேக்கஆப் எல்லாம் முடிந்து பிரேமலதா பிரசாரத்தைத் தொடங்க மணி 11 ஆகிவிட்டது.
இதனால் ஒவ்வொரு இடத்திலும் வேனிலேயே உட்கார்ந்தபடி பேசியபடி பிரேமலதா கிளம்பினார். திருச்சி ஆண்டார் வீதிக்கு அவர் வந்து சேரும்போது, மணி 12.30.
தொண்டர்கள் வெயிலில் காத்துக்கிடக்க, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சிட்டிங் எம்.பி.குமார் ஆகியோர் கீழே நின்றுகொண்டிருக்க, வேன் உள்ளேயே உட்கார்ந்தபடி மூன்று நிமிடங்கள் பேசியவர், கை காட்டியபடி நகர்ந்தார்.
தே.மு.தி.க வேட்பாளர் வேன் மேலே கும்பிட்டபடி நின்றார். பிரேமலதாவுக்காகக் கொண்டுவந்திருந்த ஆளுயர மாலையைக்கூட அவர் பெற்றுக்கொள்ளவில்லை. பிரேமலதாவின் இந்த நடவடிக்கை அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்தது.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கடந்த வாரம் பிரேமலதாவை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பேசினார். அதனாலேயே அவர் தொண்டர்களைச் சந்திக்க வெளியில் வரவில்லையோ எனப் புலம்பியபடி நடந்தனர்.
ஆனால் தே.மு.தி.க-வினர், ”அண்ணியார் கொஞ்சம் அப்செட். ஆனால், மாலையில் அவர் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் செய்துவருகிறார்” என்றார்கள்.
எது எப்படியோ பிரமலதா அவ்வபோது அடிக்கும் கூத்துகளினால் மீமிஸ் கண்டெண்ட் கிடைத்து விடுவதாக நெட்டிசன்ஸ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனதராம்.