கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆரோக்கிய சேது’ செயலி அந்தரங்க உரிமை விதிகளுக்கு ஏற்ப இல்லை என இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் எச்சரித்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் ‘ஆரோக்கிய சேது’ செயலியை வெளியிட்டது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் செயலி செயல்படுகிறது.

இந்த செயலி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், இதில் சேகரிக்கப்படும் அலைபேசி எண், வயது, பாலினம், இருப்பிட விவரங்கள் உள்ளிட்ட தனிநபர் விவரங்கள், வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது என்று இன்டர்நெட் பிரீடம் பவுண்டேசன் தெரிவித்துள்ளது.

சமஸ்கிருத மொழியில் ‘ஆரோக்கிய சேது’ (உடல்நலத்திற்கான பாலம்) என்னும் பெயர் கொண்ட இந்த செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கொரோனா தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும்.

இந்த செயலி உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளாக எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிய முடியும். கொரோனா தொற்று ஏற்பட பயன்பாட்டாளருக்கு வாய்ப்புகள் இருப்பின், உடனடியாக அவர்களைப் பற்றிய தகவலை அரசுக்கு தெரியப்படுத்தும்.

இந்தியாவில் செயல்படும் இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் எனும் இணையதள சேவை உரிமைகளுக்கான அமைப்பு, ஆரோக்கிய சேது செயலி விவகாரத்தில் அந்தரங்க கொள்கைகள், பயன்பாட்டு விதிகள் குறித்து எவ்வித சட்ட வரையறையும் இல்லை. பயன்பாட்டாளர்களின் தனிநபர் குறித்த தரவுகள் இந்திய அரசின் எந்த துறை அல்லது அமைச்சகத்தை சேர்ந்த எந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது என்ற விவரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

எனவே, இப்போது நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சேகரிக்கப்படும் தரவுகள், இந்திய அரசால் வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படவும் வாய்ப்புண்டு என்று இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் எச்சரிக்கிறது.

ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க இதுபோன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் ‘கரோனா வைரஸ் தடுப்பு பணி தவிர்த்து வேறு எந்த பணிக்கும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.