உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்கள் இளங்கலை தத்துவம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள மாநில அரசின் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவம் பாடப்பிரிவில் ஏற்கனவே முதல்வர் யோகி ஆத்தியநாத் மற்றும் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் குழுவின் பரிந்துரை அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் முதல்வர் ஆதித்யநாத்தின் ‘ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா’ மற்றும் பாபாராம்தேவின் ‘யோக் சாத்னா வா யோக் சிக்கிட்சா ரஹஸ்யா’ ஆகிய புத்தகங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு புத்தகங்களும் உயர் இலக்கிய கருத்துக்களையும் கல்விக்குத் தேவையான கருத்துக்களையும் கொண்டிருப்பதால் அவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகப் பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஏற்ப மாநிலத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஒரு பொதுவான பாடத்திட்டத்தை உருவாக்க மாநில அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையில் தான் தற்போது முதல்வர் யோகி ஆத்தியநாத் மற்றும் ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்கள் இளங்கலை தத்துவம் பாடப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன.

இதன்படி இளங்கலை தத்துவம் படிக்கும் மாணவர்கள் இனிமேல் தங்களின் இரண்டாவது செமஸ்டரில் யோகி ஆதித்யநாத், ராம்தேவின் புத்தகங்களை படித்து தேர்வெழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கை கருத்தை பரப்பி வரும் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவை மாணவர்கள் படிக்கும் பாடபுத்தகத்தில் சேர்த்ததற்கு மாணவர்கள், கல்வியாளர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் வரை செல்லும்- ஒன்றிய கல்வி அமைச்சகம்