வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
அந்த சட்டத்தின்படி, டிசம்பர் 31, 2005 க்கு முன் 3 தலைமுறைகளாக வனப் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு அந்த நிலங்களுக்கான உரிமையை வழங்கவேண்டும்.
 
ஆனால் பழங்குடியினர் மக்களுக்கு பயன் தரும் இந்த சட்டத்தை எதிர்த்து வன ஆர்வலர்கள் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
அவர்கள் தரப்பில், வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலங்களுக்கு பட்டா நிராகரிக்கப்பட்ட பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று கூறப்பட் வந்தது. இந்த சட்டம் வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரது அமர்வு முன் கடந்த 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, மொத்தம் 11,72,931 பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களின் பட்டா நிராகரிக்கப்பட்டுள்ளதாக 17 மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்தன.
 
இதையடுத்து, பட்டா நிராகரிக்கப்பட்ட 11,72,931 பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களை ஜூலை 12-ஆம் தேதிக்குள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் வழக்கு விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு செயற்கைக்கோள் படத்தை தாக்கல் செய்யுமாறு இந்திய வனத்துறை ஆய்வு மையத்தை அறிவறுத்தியுள்ளது.
 
இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. இதனால், பட்டா நிராகரிக்கப்பட்ட 11,72,931 பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதில், தமிழகத்தில் சுமார் 8,000 பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்களின் பட்டா நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம், காடுகளில் இருக்கும் அவர்களது குடியிருப்பில் இருந்து பட்டா நிராகரிக்கப்பட்ட அனைவரையும் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் தற்போது தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இப்படி அதிமுக அரசு தங்களை கைவிட்ட நிலையை கண்டு பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கல் வந்த வண்னம் உள்ளன