முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
 
மேலும் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்டாலினுடன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரும் ஆளுநரை சந்தித்து உள்ளனர்.
 
கொடநாடு கொலையை இயக்கியதே எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
முதல்வர் பதவியில் எடப்பாடி நீடிப்பது தமிழகத்திற்கு அவமானம் என ஸ்டாலின் கூறினார். குடியரசு தலைவரிடம் புகார் கொடுப்போம் எனவும் கூறினார்.
 
மேலும் கொடநாடு கொலை தடயங்களை அழிக்க எடப்பாடி முயற்சிப்பதாக தொவித்தார். நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறினார்.
 
இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை செய்வேன் என ஆளுநர் உறுதியளித்துள்ளார் என ஸ்டாலின் தெரிவித்தார். பாரபட்சமற்ற விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறினார்.
 
கடந்த 2017-ல் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் ஜாமினில் வெளியில் இருந்தனர். ஜாமினில் வந்த 2 பேரும் கொடநாடு கொலையில் முதல்வருக்கு தொடர்பு என்று கூறியிருந்தனர். முதல்வர் மீது கொலை புகார் கூறியதால் சயன், மனோஜ் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
 
தெகல்கா ஏட்டின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ, கடந்த வெள்ளியன்று பேட்டியளித்தார். பேட்டியின் போது மேத்யூ உடன் சயன், மனோஜ் இருவரும் இருந்தனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு தொடர்பு உள்ளது என்று சயன் கூறினார். எடப்பாடி கூறியதால் கார் ஓட்டுநர் கனகராஜ் கொடநாட்டில் ஆவணங்களை எடுக்க முயன்றதாக கூறினார். ஆவணங்களை எடுத்த போது தடுத்ததால் வாட்ச்மேன் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
 
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 5 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர்.
 
ஆவணங்களை எடுப்பதை தடுத்ததால் வாட்ச்மேன் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
கொலை, கொள்ளையில் ஈடுப்பட்ட ஓட்டுநர் கனகராஜ் இரண்டு நாளில் மர்ம மரணம் அடைந்துள்ளார்.
 
2-வது குற்றவாளியான சயனின் மனைவி மகள் சாலை விபத்தில் இறந்துள்ளார். கொடநாடு சிசிடிவி ஆப்ரேட்டர் தினேஷ்குமார் 2 மாதம் கழித்து தற்கொலை செய்துள்ளார்.