இளைஞர்களை அடிமையாக்கி வைத்துள்ள பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று 11 வயது சிறுவன் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளான்.
நாளுக்கு நாள் செல்போன் விளையாட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அவ்வாறு தற்போது பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு டிரெண்டிங்கில் உள்ளது. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி வருகின்றனர். குழுவாக பேசி கொண்டே விளையாடும் இந்த விளையாட்டு குஜராத் மாநில பள்ளிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்போது மகாராஷ்ட்ராவிலும் இதற்கு தடை விதிக்கக் கோரி, அஹத் நிஜான் என்ற 11 வயது மாணவன், அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளான்.
மும்பை பாந்த்ராவில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் நிஜான், கடந்த 25 ஆம் தேதி அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த விளையாட்டை சில நாட்கள் விளையாடினேன். அதை தொடர்ந்ததில் இருந்து எனக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றியதால் விட்டுவிட்டேன்.
அதில் வன்முறை, கொலை, கொடூரம், குழந்தைகளுக்கு பொருத்தமில்லாத தவறான மொழிகள் இருக்கிறது. அதனால் அதை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளான்.
இந்த கடிதத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ் டே உள்ளிட்ட 7 அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளான். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடர இருப்பதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.