வாக்காளர் பட்டியலில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ ஷங்கரின் பெயர்கள் இல்லை என புகார் எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். மேலும் திரையுலக பிரபலங்களும் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை பதிவு செய்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, வடிவேல், இயக்குனர் பாரதிராஜா, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் ஜோதிகா, திர்ஷா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனரும் பிரபல நடிகருமான ரமேஷ் கண்ணா வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து நடிகர் ரமேஷ் கண்ணா கூறியபோது, “எனக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்கின்றது. நான்கைந்து முறை இதே பூத்தில் தான் ஓட்டு போட்டுள்ளேன். இப்போது எனக்கு ஓட்டு இல்லை என்றும் என் மனைவிக்கு மட்டும் ஓட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரே வீட்டில் கணவனுக்கு ஓட்டு இல்லை, மனைவிக்கு ஓட்டு இருக்கின்றது. இது யார் தவறு. அரசாங்கம் இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

தேர்தலின்போது ஓட்டு போடுங்கள் என்று சொன்னால் மட்டும் பத்தாது. தேர்தல் ஆணையம் தனது வேலையை சரியாக செய்ய வேண்டும். என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்கு யார் காரணம்., இப்போது என்னால் ஓட்டு போட முடியவில்லையே.. இப்படி இருந்தால் யார் ஓட்டு போட வருவார்கள். சர்கார் படம் வந்த பின்னர் தான் 49P என்பதே அனைவருக்கும் தெரிய வந்தது. இப்போது இதுக்கு ஒரு படம் வந்தால்தான் ஒரு தீர்வு கிடைக்குமா..” என்று ஆவேசமாக கூறினார்.

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க காலை 7.30 மணிக்கு, சென்னை வளசரவாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்ற போது அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி அவருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், பல முறை அதிகாரிகளிடம் பேசி போராடி அவர் கடைசியில் வாக்களித்துள்ளார். தான் வாக்களித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரோபோ ஷங்கரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதனால் அவர் வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டு ஓட்டு போட முடியாமல் திரும்பிச் சென்றார். திரைபிரபலங்கள் மட்டுமின்றி குடிமக்கள் பலரும் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிளிருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என வாக்காளர்களுக்கு கூறுவதற்கு முன் தேர்தல் கமிஷன் தனது வேலையை சரியாக செய்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.