பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பத்திரிக்கையாளர் மைக்கை பிடுங்கி வீசி, அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விவசாயிகள் மீது கார் ஏறி கொல்லப்பட்ட சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அஜய் மிஸ்ரா நேற்று (14.12.2021) தன் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை சிறையில் சந்தித்துவிட்டு, இன்று (15.12.2021) லக்கிம்பூர் ஆக்ஸிஜன் ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம், ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த அஜய் மிஸ்ரா, அந்த பத்திரிக்கையாளரை தள்ளிவிட்டு அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி வீசினார். மேலும் அவரை அவதூறான வார்த்தைகளால் கண்டபடி திட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய பாஜக அமைச்சர் பத்திரிகையாளரை அநாகரிகமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.