ரயில்வே துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச நிதி ஒதுக்கீடாக ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பயணச்சீட்டு மற்றும் சரக்கு கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் கட்டண உயர்வு நடவடிக்கை எதையும் அரசு முன்னெடுக்கவில்லை என கருதப்படுகிறது.
முன்னதாக, கடந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதே மிக அதிகபட்ச நிதி ஒதுக்கீடாக இருந்தது.
மத்திய நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருபவரும், ரயில்வே துறை அமைச்சருமான பியூஷ் கோயல், மக்களவையில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ரயில்வே துறை தொடர்பாக அவர் கூறியதாவது:
அடுத்த நிதியாண்டில் ரயில்வே துறையின் செலவினங்களுக்கான முதலீடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.1.58 லட்சம் கோடியாக இருக்கும்.
உள்நாட்டிலேயே (சென்னை) தயாரிக்கப்பட்ட “வந்தே பாரத்’ அதிவிரைவு ரயிலில் பயணிகளுக்கு உலகத் தரத்திலான அனுபவங்கள் கிடைக்கும். முழுவதும் உள்நாட்டு பொறியாளர்களால் தயாரிக்கப்பட்ட அந்த ரயில் “இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு உந்துசக்தியாக இருப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும்.
கடந்த 2018-19 காலகட்டத்தில் இருந்து ரயில்வே துறை பாதுகாப்பானதாக இருந்து வருகிறது. அகல ரயில் பாதையில் ஆளில்லா கடவுப்பாதைகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018-19 நிதியாண்டில் ரயில்வே துறையின் மொத்த வருமானம் ரூ.2.49 லட்சம் கோடியாக இருந்தது.
அடுத்த நிதியாண்டில் இந்த தொகை ரூ.22,854.67 கோடி அதிகரித்து ரூ.2.72 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் புதிய இருப்பு பாதைகளை அமைப்பதற்காக ரூ.7,255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகல ரயில் பாதைகளாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,200 கோடி செலவிடப்படவுள்ளது.
சரக்குகளைக் கையாள ரூ.6,114.82 கோடியும், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்காக ரூ.1,750 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் முதலீடுக்கும், லாபத்துக்குமான வேறுபாடு விகிதம் 96.2 சதவீதமாக உள்ளது. இதை அடுத்த நிதியாண்டில் 95 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் பியூஷ் கோயல்.
எதிர்வரும் நிதியாண்டில் விரைவு ரயில் பெட்டிகள், அழகான மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ரயில் பெட்டிகளின் உற்பத்தி அதிகரிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“வந்தே பாரத்’ ரயில் தயாரிப்பு வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய வேண்டிய பெட்டிகளுக்கான செயல்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி, சென்னை பெரம்பூர், பஞ்சாப் மாநிலம் காபூர்தலா, மேற்கு வங்க மாநிலம் ஹால்தியா ஆகிய இடங்களில் உள்ள ரயில் பெட்டி உற்பத்தி ஆலைகளில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையமுடியுமெனில் 2019-2021 காலகட்டத்தில் மொத்தமாக 15,000 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் பட்ஜெட்டில் கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு கடற்கரை வழியாக சென்னைக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை பற்றி பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று குமரி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குமரி மாவட்ட ரயில்வேயை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.