‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே, 1948, ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தார். மகாத்மா காந்தியை கொலை செய்தது தொடர்பாக கோட்சே முன்வைத்த வாதங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “நான் ஏன் காந்தியை கொன்றேன்? (Why I Killed Gandhi?)”.
கோட்சேவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது சகோதரர் கோபால் கோட்சே எழுதிய புத்தகம் தான் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’. தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோக் தியாகி இயக்கியுள்ள ‘ஒய் ஐ கில்டு காந்தி’ என்ற திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டது.
இதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியிருந்தது. இதில் காந்தியைக் கொன்ற கோட்சே, நீதிமன்றத்தில் தன்னுடைய தரப்பு நியாயங்களைப் பேசுவதாக காட்டப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி, அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (AICWA) பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வரும் ஜனவரி 30 அன்று ஓடிடியில் வெளியாகவுள்ள ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ திரைப்படம் முற்றிலுமாக தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இந்தப் படம் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை மேன்மைப்படுத்துகிறது.
காந்திஜி இந்தியா மட்டுமின்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஒருவர். காந்திஜியின் சித்தாந்தம் ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பு மற்றும் தியாகத்தின் அடையாளமாக இருக்கிறது. இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாகவும் அனைத்து திரையுலக சங்கங்கள் சார்பாகவும் கோரிக்கை விடுக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர சமூக வலைதளங்களிலும் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றனர். அதேவேளையில், படத்தை முமுமையாகப் பார்த்த பிறகுதான் விமர்சிக்க வேண்டும் என்ற ஆதரவுக் குரல்களும் எழுகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், மீளமுடியாத பாதிப்பு ஏற்படும். நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும், வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்துகிறது. அவரை கொன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்துகிறது. எனவே இந்த படத்தை தடைவிதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முன் உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியிருக்க வேண்டும். இப்போதும் கூட மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக ‘ஒய் ஐ கில்டு காந்தி’ படத்தை தடை செய்யக் கோரி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காந்திஜியைக் கொன்றவரை ஹீரோவாக காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காந்திஜியும் மற்றும் அவருடைய கொள்கைகளும் உலகளவில் கொண்டாடப்படுகின்றன. காங்கிரஸ் இப்படத்தை முற்றிலுமாக எதிர்க்கிறது. இப்படம் மகாராஷ்டிராவில் வெளியாவதை அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் உத்தர் தாக்கரேவிடம் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.