பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளில் சேரலாம் என்கிற நடைமுறையை மாற்றி, நாடு முழுவதும் 900 கல்லூரிகளில் ஆன்லைன் வழியில் பட்டப் படிப்புகளில் சேரும் புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமல்படுத்த உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் விரைவில் நாடு முழுவதும் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்லைன் வழியில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறை நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பில் சேர்ந்து படிக்க பல்கலைக்கழக மானியக் குழு புதிய வரைவுத் திட்டத்தை வகுத்துள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் அதே பாடதிட்டத்தின் படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.
ஆன்லைன் மூலம் தேர்வுகளையும் நடத்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டில் முன்னணியில் உள்ள கல்லூரிகள் ஆன்லைன் பட்டங்களை வழங்க அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக ஆன்லைன் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் கருதப்படுவார்கள் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
நாட்டில் உயர்தரமான சுயநிதி கல்லூரிகள் அதிகமாக உள்ளன. அந்தக் கல்லூரிகளால் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு கல்வியை வழங்க முடியும். அந்தவகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் முதுகலை படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
மேலும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளை துவங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் முன் அனுமதி பெற அவசியம் இல்லை. எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் NAAC எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.