நாடு முழுவதும் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வு ஆகியவை புத்தாண்டு நாளான இன்று (1.1.2022) முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர 2019 ஆம் ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு அளவையும் மறு ஆய்வு செய்து, ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
முதல் கட்டமாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதுபோலவே ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணமும் மாற்றியமைக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதேபோல மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுப்பதாக இருந்தால் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும் மெட்ரோ அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 முறையும் இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு 2022, ஜனவரி 01 முதல் மாற்றியமைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (1.1.2022) முதல் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணத்தின் படி 5 முறைக்கு மேல் ஏடிஎம்.மில் பணம் எடுத்தால் ரூ.21 கட்டணம் பிடிக்கப்படும்.
அதேபோல் பிற வங்கி ஏடிஎம்கள் பயன்பாட்டைப் பொறுத்தவரைப் பெருநகரங்களில் 3 பரிவர்த்தனைகளையும், சிறு நகரங்களில் 5 பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். இந்த நடைமுறை புத்தாண்டான இன்றிலிருந்தே அமலுக்கு வந்துள்ளது.
ஏடிஎம் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி தேவை அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.