பிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட் வரும் நவம்பா் 7-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா சார்பில் கடந்த ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி ‘ரிசாட்’ செயற்கைக்கோளைத் தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. அதன் பின்னா் கடந்த மாா்ச் மாதத்தில் ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட்டை ஏவத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அது கடைசி நேர தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவைச் சேர்ந்த சுமார் 70 விஞ்ஞானிகள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். இதனால், ஆய்வு மையம் தற்காலிகமாக மூடப்பட்டு, ஆய்வுப் பணிகள் முடங்கின.
தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், மீண்டும் விண்வெளி ஆய்வுப்பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக தற்போது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ராக்கெட் மூலம் இந்தியாவின் புவிக் கண்காணிப்புக்கான ‘இஓஎஸ்-1’ செயற்கைக்கோள் மற்றும் வணிகரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நவம்பா் 7-ஆம் தேதி மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. அத்துடன், இயற்கை சூழ்நிலையை பொறுத்து ஏவப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த ராக்கெட்டில் இடம்பெற்றிருக்கும் முதன்மை செயற்கைகோளான ‘இஓஎஸ்-1’, புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் என்றும், மீதமுள்ள 9 பன்னாட்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் வணிகப் பயன்பாட்டுக்காக செலுத்தப்படவிருக்கின்றன.
இம்முறை கொரோனா தொற்று பரவல் காரணமாக பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை என்றும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் காட்சிகள் இஸ்ரோவின் அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து வரும் டிசம்பரில் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
SEBI-Securites and Exchange Board of India invites- ல் வேலைவாய்ப்பு