நடிகை பானுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைக் எடுக்கக் குழந்தைகள் நலக் குழும அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பானுப்பிரியா. தற்போது சென்னையில் வசித்து வரும் இவரது வீட்டில் ஆந்திரா மாநிலம் சாமர்லகோட்டையை சேர்ந்த சந்தியா என்ற சிறுமி வீட்டு வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சந்தியாவின் அம்மா பிரபாவதி ஆந்திர மாநிலம், சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் “நடிகை பானுப்பிரியா தனது 14 வயது மகள் சந்தியாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றார். கடந்த 18 மாதமாக சம்ளமும் கொடுக்கவில்லை. பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் தனது மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்” என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகை பானுப்பிரியா, பிரபாவதியின் புகாரை மறுத்தார். மேலும், தன் வீட்டில் இருந்த பொருட்களை சந்தியா திருடியதாகவும், அதை கண்டுபிடித்துவிட்டதால் தங்கள் மீது வீண் பழி போடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவரை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தினர். சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியிடம் ஆந்திரா சாமர்லகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலக் குழும அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் 14 வயதில் பணிக்கு அனுப்பிய சிறுமியின் தாயார் பிரபாவதியை விசாரணைக்கு ஆஜராகுமாறு குழந்தைகள் நலக் குழுமம் சம்மன் அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.