தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்தர அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வந்தனர். 100 நாட்கள் போராட்டம் நடத்திய பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்திய போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மிக கொடூரமான போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் 10 வயது சிறுமி கூட போலீஸ் மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த துப்பாக்கி சூடு நடந்த பின் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை தூத்துக்குடி மருத்துவமனையில் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “தமிழகத்தில் போராட்டம் நடந்தால் எந்த தொழில் முதலீடும் வராது. இப்படித்தான் தமிழகம் வறுமையில் இருக்கும். தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால் நாடே சுடுகாடாகிவிடும். அனைத்திற்கும் போராட்டம் போராட்டம் என்று சுற்ற கூடாது.

தமிழகத்திற்கு முதலீடு வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலை வாய்ப்பும் கிடைக்காது. மக்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படியே செய்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும். இளைஞர்களும் கஷ்டப்படுவார்கள். இந்த போராட்டத்தில் அந்நிய சக்திகள் புகுந்து விட்டார்கள். இது போன்ற விஷயங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு விஷக்கிருமிகளை, சமூக விரோதிகளை அடக்க வேண்டும்.

இந்த போராட்டம் சமூக விரோதிகள் மூலம் தூண்டி விடப்பட்ட போராட்டம்; புனிதமான போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டார்கள். இதில் தற்போது ரத்தக்கறை பதிந்துவிட்டது. இவர்களை எல்லாம் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும். அந்த விதத்தில் ஜெயலலிதாவை பாராட்டுவேன். அவர் சமூக விரோதிகளை உடனுக்குடன் கைது செய்து வந்தார்” என்று பேசினார்.

நாடு உலுக்கிய இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் இதுவரை 17 கட்ட விசாரணைகளை செய்து முடித்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விளக்கம் அளிக்க பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் ஆணையம் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரத்திற்கு சமூகவிரோதிகளே காரணம் என்று சொன்னது ஏன்? இது தொடர்பாக அளித்த பேட்டி குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.