நடிகர் சங்கத் தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்ற நடிகர் சங்கத்` தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1604 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
கமல் ஹாஸன், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், ஆர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களித்தனர். அஜித் வாக்களிக்க வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. நடிகர் சந்தானம் வாக்களித்துவிட்டு தனது ஆதரவு பாண்டவர் அணிக்கே என்றார். மேலும் ஆர்யா சைக்கிள் ஓட்டியபடியே வந்து வாக்களித்தார்.
இன்றைய தேர்தலில் பெரிதாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. நடிகர் மைக் மோகன் பெயரில் யாரோ வாக்களித்துவிட்டனர். அதனால் அவர் அது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒன்றும் நடக்காது என்று தெரிந்த பிறகு கோபமாக கிளம்பிவிட்டார்.
மேலும் நடிகர்கள் பெஞ்சமின், சிங்காரவேலன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டதற்கு நீங்கள் வெளியூர் முகவரி அளித்துள்ளீர்கள் என்று கூறுகின்றனர். மேலும் போஸ்டல்ல தான் ஓட்டு போடனும் என்கின்றனர்.
எனக்கு எந்த தபாலும் வரவில்லை. எங்கள் ஓட்டுரிமை பரிக்கப்படுகிறது. இது ஜனநாயகப் படுகொலை என்றனர். பின்னர் பேசிய பெஞ்சமின், நான் ஒன்பது வருடங்கள் நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஓட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்றனர்.
தர்பார் படப்பிடிப்பில் மும்பையில் இருக்கும் ரஜினிகாந்துக்கு தபால் ஓட்டு தாமதமாக சென்றதால் அவரால் ஓட்டு போட முடியவில்லை. ரஜினி வாக்களிக்க இயலாமல் போனதற்கு நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியில் செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்து 9 பேர் வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்றதால் விஷாலின் பாண்டவர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்த பிறகு சுவாமி சங்கரதாஸ் அணியினர் பாண்டவர் அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாசர் கூறியதாவது, இன்றைய தேர்தலில் 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 1, 604 நேரில் வாக்களித்துள்ளனர். 900 பேர் தபால் ஓட்டுகள் மூலம் வாக்களித்துள்ளனர். வாக்குப்பெட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வைக்கப்படும். வரும் ஜூலை மாதம் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றார்.