சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விஜய கமலேஷ் தஹில் ரமணியின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முதல் வரிசைகளில் அமரவைக்கப்பட வேண்டும் என்பது தான் மரபு ஆகும். புரோட்டாக்கால் எனப்படும் அரசியலமைப்புப் படிநிலை வரிசையும் இதையே வலியுறுத்துகிறது. ஆனால், நேற்றைய விழாவில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் வரிசைகளில் அமர வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏதோ மூன்றாம் தர மனிதர்களைப் போல பின்வரிசைகளுக்கு தள்ளப்பட்டனர். நீதியரசர்கள் அமருவதற்கு முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் படிநிலை வரிசைப்படி தங்களுக்கு மரியாதை வழங்கப்படாததால் வருத்தமடைந்த இரு நீதிபதிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளிநடப்பு செய்ய முயன்றுள்ளனர். ஆனால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தலையிட்டு அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வெளிநடப்பு செய்வதைத் தடுத்துள்ளார். மற்ற நீதியரசர்களும் இந்த அவமதிப்பால் வேதனை அடைந்தாலும், நாகரிகம் கருதி அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு நீதியரசர் எம்.எஸ். இரமேஷ் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பிறகுதான் நீதிபதி வருவார்களா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி அரசமைப்பு படிநிலை முறையாக பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருக்கை ஒதுக்கீடு குறித்த தலைமை பதிவாளரின் ஆலோசனை ஏற்கப்படவில்லை என கூறிய நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அதுகுறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யானம் நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பை தடுத்து நிறுத்த தவறியது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.