திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தொழிலாளர் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 335 திரையரங்குகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற 114 தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் தியேட்டர் கேண்டீன்களில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலை அதிகமாக இருப்பதால், பலரும் திரையரங்குக்கு வருவதையே தவிர்த்து வருகின்றனர்.
தயாரிப்பாளர்கள் உட்பட திரைத்துறையினருக்கு தியேட்டர் பாப்கார்ன் பிரச்சினையே பெரும் பிரச்சினையாக நிலவி வந்தது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க பலமுறை திரைத்துறை சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுமக்களும் இது பற்றி புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட விலைக்கு அதிகமாக பல திரையரங்குகளில் தின்பண்டங்கள் விற்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்றதாக 72 தியேட்டர் கேண்டீன் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், பொருட்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்டின் மீது முகவரி, விலை, உபயோகிக்க வேண்டிய காலம் உள்ளிட்ட தகவல்களை அச்சிடாமல் விற்பனை செய்த 42 தியேட்டர் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்தால் ‘TN-LMCTS’ என்ற மொபைல் செயலி மூலம் மக்கள் புகார் செய்யலாம்’ என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
அதேபோல, ‘சாலையோரக் கடைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கூடுதல் விலைக்குப் பொருள்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு குறைத்து விற்று மோசடி செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது.