நடிகை ஸ்ரீரெட்டி சமீபகாலமாக குறிப்பிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள பெயரை வெளியிட்டு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் வந்தன.
ஸ்ரீரெட்டி அண்மையில் பெண்கள் தாங்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளை தன்னிடம் பகரிந்து கொள்ளலாம் என கூறினார். இதனால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் தன் மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என ஸ்ரீரெட்டிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இதனால் ஸ்ரீ ரெட்டி தன் பேஸ்புக் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்த அந்த மேலாளருக்கு சென்னை பெண்கள் செருப்படி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை மீனாவும் திரைத்துறையில் பாலியல் தொல்லை எல்லாம் சகஜம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளர். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியதாவது, “எல்லா துறையிலும் பெண்களுக்கு பிரச்னை உள்ளது. எனக்கு அந்த பிரச்னை வராவிட்டாலும், எங்களது காலத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது.
பெண்கள் தங்கள் திறமைக்கான வாய்ப்பை நல்வழி முயற்சியின் மூலம் பெற வேண்டும். எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள கூடாது. சில வக்கிர புத்தியுடைய ஆண்கள் பெண்களிடம் தவறாக பேசுவதற்கு முன்பு தங்களுக்கும் மனைவி, மகள் இருப்பதை எண்ணி பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்த நடிகை ப்ரியா பவானி சங்கரிடம், ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது, “தற்போது இருக்கும் நடிகைகள் எல்லா தவறையும் செய்து விட்டு, அதை வெளிப்படையாக வெளியில் சொல்வதை கவுரவமாக நினைக்கின்றனர், அது மிகவும் தவறு.
சொல்லப்போனால் எல்லா துறைகளிலும் பாலியல் வன்கொடுமை இருக்கத்தான் செய்கிறது, அதேபோல தான் சினிமா துறையிலும் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை, இருந்தாலும் தான் செய்த தவறுக்கு எல்லோரையும் குறை கூறுவது ஒரு தவறான செயல். முடிந்த வரை குடும்ப படங்களில் நடித்துவிட்டு செல்வதே நல்லது. தவறான செயல்களில் ஈடுபடுவதை நாமே தவிர்க்க முடியும் இல்லையென்றால் இந்த துறையில் இருந்து வெளியே செல்லவும் முடியும்.
அவ்வாறு செய்தாலே போதுமே அதை விட்டுவிட்டு தன் பெயரை தானே கெடுத்து கொள்ளும் செயலை ஸ்ரீ ரெட்டி போன்ற நடிகைகள் தவிர்த்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.