வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்து வரும், திமுக அரசை கண்டித்து வரும் 25 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து,
கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
முன்னதாக ஒன்றிய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழ்நாட்டைல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்திருந்தார்.
அதன்படி, மின்கட்டண உயர்வு குறித்து கருத்துகளை அளிக்க மின் நுகர்வோருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.