ஊழியர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் கொடுக்காததால் ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலை அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில், விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோன் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இயங்கும் ஐபோன் தொழிற்சாலையை தைவான் நாட்டைச் சார்ந்த விஸ்ட்ரான் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.
இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் மூலம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதியம் வழங்க முன்வராததால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் தொழிற்சாலையில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறையினால், 437 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான ஐஃபோன்கள் திருடப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த தொழிற்சாலைக்கு விஸ்ட்ரான் நிறுவனம் கான்ட்ராக்டர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு எடுத்துள்ளது. அந்த தொழிற்சாலை, கான்ட்ராக்டர்களிடம் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பளத்தைத் தந்து விட்டதாகவும், கான்ட்ராக்டர்கள் சம்பளத்தைத் தொழிலாளர்களுக்கு கொடுக்க தாமதப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுமார் ஒரு வாரகாலத்திற்கு பிறகு, கோலார் ஐபோன் ஆலையில் ஏற்பட்ட குறைபாடுகளை விஸ்ட்ரான் நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து விஸ்ட்ரான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோரியதுடன், ஐபோன் நிறுவனத்தின், இந்திய கிளையின் துணைத் தலைவர் வின்சென்ட் லீயை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.
மேலும் நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நிகழ்வு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சில தொழிலாளர்களுக்கு சரியாக அல்லது சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதற்காக நாங்கள் இதை மிகவும் வருந்துகிறோம், எங்கள் தொழிலாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம் என்று கூறியுள்ளது.
மீண்டும் இதுபோன்ற சிக்கல்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்காக செயல்முறைகளை மேம்படுத்துவதோடு, அதன் குழுக்களை மறுசீரமைப்பதாகவும், அதற்காக கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில், 24 மணிநேர குறை தீர்க்கும் ஹாட்லைனையும் அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக முழு இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை, அதை அடைய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த வசதியில் உள்ள தொழிலாளர்களுக்காக ஒரு பணியாளர் உதவித் திட்டத்தை நாங்கள் நிறுவியுள்ளோம்.
எங்கள் வணிகத்திற்கும் இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கும் நாங்கள் ஆழ்ந்த கடமைப்பட்டுள்ளோம். இது மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் சரியான நடவடிக்கைகளில் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம் என்று விஸ்ட்ரான் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
8 மாதங்களாக சம்பள பாக்கி: ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலையை சூறையாடிய ஊழியர்கள்