தமிழ்நாடு காவல்துறையின் 30வது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டு, இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், இன்று (30-06-2021) சைலேந்திர பாபு முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு காவல்துறையில் சிபிசிஐடி, சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்புத் துறை, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி. இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என்றும் அழைக்கிறார்கள்.
இந்தப் பதவிக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரியைத் தமிழ்நாடு அரசு நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (UPSC) சமர்ப்பித்து அவர்கள் அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவரைத் தேர்வு செய்ய முடியும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்குக் கட்டாயம் பதவியில் இருப்பார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி பதவிக்காலம் இன்றுடன் (ஜூன் 30) நிறைவடைவதால், புதிய டிஜிபி நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது.
அதில் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு, மத்திய அயல் பணியில் உள்ள சஞ்சய் அரோரா, தீயணைப்புத் துறை டிஜிபி கரன் சின்ஹா, சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், டான்ஜெட்கோ டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் பெயர் இடம்பெற்றது.
தமிழ்நாடு அரசு அளிக்கும் பட்டியலில் இருந்து ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவர் டிஜிபியாக நியமனம் செய்யப்படுவார். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் காவல்துறை புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
[su_image_carousel source=”media: 24791,24792″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?
புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு சைலேந்திர பாபு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர். 1987ஆம் ஆண்டு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திரபாபு 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 34 வருடங்கள் காவல்துறை பணியில் இருக்கிறார்.
தமிழக விவசாய கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகை ஆய்வுப்பிரிவில் முதுகலை மேல்படிப்பும் முடித்தார்.
‘காணாமல் போன குழந்தைகள்’ என்ற தலைப்பில் பகுப்பாய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்ற இவர், பின்னாளில் மனித ஆற்றல் பிரிவில் முதுகலை பட்டமும் (எம்பிஏ) பெற்றார்.
குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை குவித்தவர்.
தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய சைலேந்திர பாபு, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்.பியாகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜியாகவும் முத்திரை பதித்தவர் சைலேந்திரபாபு.
இவர் கோவை மாநகர ஆணையராக பணிபுரிந்த காலத்தில் தான் சிறுமி முஸ்கன் மற்றும் அவரது சகோதரர் ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தது. இதில் தொடர்புடைய மோகன்ராஜ் என்ற குற்றவாளி மீது என்கவுன்ட்டர் நடந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வடக்கு மண்டல ஐ.ஜியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திர பாபு, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாகவும் பதவி வகித்துள்ளார். அப்போது தனது கீழ் பணியாற்றும் கடலோர காவல்படை காவலர்களுடன் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் மீனவ இளைஞர்களை சேர்த்து குழுக்களை அமைத்தார். 5,000 பேர் கொண்ட இளைஞர்களை தேர்தெடுத்து ஸ்பெஷல் பயிற்சி கொடுத்தார். அவர்கள்தான் கடலோர கேட்-கீப்பர்கள். தமிழக கடலோரங்களில் 30 கடலோர காவல்நிலையங்களை திறந்தார்.
சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை டிஜிபியாகவும் இருந்துள்ளார்.
தற்போது ரயில்வே டிஜிபியாகப் பதவி வகிக்கிறார். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி சட்டம் – ஒழுங்கு பிரிவிலும் அதிக அனுபவம் உள்ளவரான சைலேந்திரபாபு ஐபிஎஸ், தமிழ்நாடு காவல்துறையின் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பதவி ஏற்றுக் கொண்டப பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு ஐபிஎஸ், காவல்துறையினர் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கு காவல்துறையினருக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும், காவல்துறையினரின் நலனும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் எங்கள் செயல்பாடுகள் பேசும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.