பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான விசு பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஆனால், தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன் எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை பெற்ற பாஜக, தூத்துகுடி, கன்னியாகுமரி, சிவகங்கை, கோயமுத்தூர், இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களையும் சமீபத்தில் அறிவித்தது. இதில் தூத்துகுடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவதால் இது முக்கிய தொகுதிக்கான அந்தஸ்து பெற்றுள்ளது.
மேலும் தூத்துக்குடி தொகுதி, ஸ்டெர்லைட் மற்றும் சோபியா பிரச்சனைகளால் சர்ச்சைக்குரிய தொகுதியாக பார்க்கப்படுகிறது,.
இந்நிலையில் தமிழிசையை வெற்றி பெற வைக்க பாஜகவினரும், கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருபவரும், கடந்த 80,90களில் பிரபலமான இயக்குனராக இருந்தவருமான விசு, தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசு பேசிய போது, “பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஆனால், தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன். கட்சியில் உறுப்பினராகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருமுறைகூட கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசையை சந்திக்க முடியவில்லை.
இந்தச் சூழலில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு என்னை அழைத்தார்கள். தெரிந்தோ தெரியாமலோ நான் ஒரு பிரபலமாக இருக்கிறேன். என்னாலேயே தமிழிசையைச் சந்திக்க முடியவில்லை எனில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அவரை சந்திக்க முடியும். எந்த நம்பிக்கையில் அவரை ஆதரித்து என்னால் பிரசாரம் செய்ய இயலும்.” என்று தெரிவித்துள்ளார்.