ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை தமிழில் மூன்று பேர் உருவாக்கி வருகின்றனர். அதில் ‘அம்மா’ என்ற தலைப்பில் இயக்குனர் பிரியதர்ஷ்னி இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். சசிகலா கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று பற்றிய வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாகவாக நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் இதனுடைய முதல் சீசன் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை ஏ.எல். விஜய் இயக்குவதாக அறிவித்தார். இதில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான கங்கனா ரனவுட் நடிப்பதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டுள்ளார்.

‘தலைவி’ படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகிறது. தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ‘ஜெயா’ என்ற பெயரில் வெளிவரவுள்ளது. மேலும் பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளார்.

சமீபத்தில் கங்கனா ரனவுட் நடித்த ‘மணிகர்னிகா‘ திரைப்படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.