2017-18ம் ஆண்டில் 9.7 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் வளர்ச்சி, தற்போது 14 சதவீதத்துக்கும் கூடுதலாக இருக்கும்.
 
இந்த மாற்றத்தால் 2018-19ம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட, வருவாய் பற்றாக்குறை ₹19,319 கோடியில் இருந்து 2019-20ம் ஆண்டில் ₹14,315 கோடியாக குறையும்.
 
2017-18ம் ஆண்டில் ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ₹5,454 ேகாடி, பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் ₹455.16 கோடி அளவிலான உறுதி செய்யப்பட்ட இழப்பீட்டு தொகைகள், மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை. இந்த தாமதம், தமிழகத்தின் நிதிநிலையின் மீது பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
 
கஜா புயல் ஏற்படுத்தி சென்ற பாதிப்பை தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு ₹900.31 கோடி விடுவித்தது. இந்த நிதி ஆதாரத்துடன் தமிழக அரசு சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து மொத்தமாக உடனடி நிவாரண பணிகளுக்கு ₹2,361.41 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
 
சென்னை நகரில், 2லட்சம் 4 சக்கர வாகனங்கள், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றை நிறுத்த விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ₹2ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒன்றை அரசு விரைவில் அறிமுகப்படுத்தும்.
 
இத்திட்டத்தின் மூலம் இயற்கை மரணம் மற்றும் விபத்தால் ஏற்படும் மரணத்தின் போது வழங்கப்படும் இழப்பீட்டு தொகை முறையே ₹2லட்சம் மற்றும் ₹4 லட்சம் ரூபாயாகவும், விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்காக வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ₹1 லட்சமாகவும் உயர்த்தப்படும். இந்த திட்டத்துக்கான காப்பீட்டு கட்டணத் தொகைக்கு ₹250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
 
வேளாண்மை துறைக்கு ₹10,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்துக்கு ₹300 கோடியும், நீடித்த நிலையான வேளாண்மைக்காக ₹87.22 கோடி உள்பட வேளாண் துறைக்கும் 10,550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ₹10,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயிர்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ₹200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையில் வனங்களை பாதுகாக்கும் வகையில் கான்கிரீட், உயிர் வேலி அமைக்க₹25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை, சுற்றுப்புறங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழைகளை மறுகுடியமர்த்தும் திட்டத்தின்கீழ் ₹4,647.50 கோடி செலவில் 38000 குடியிருப்புகள் அமைக்கப்படும்.
 
 
நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கும், வெள்ளத் தடுப்புக்காகவும் பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்திற்கு அருகே அடையாறு ஆற்றின் உப நதியான ஒரத்தூர் நதியின் குறுக்கே கால்வாயுடன் கூடிய நீர்த்தேக்கம் அமைத்தல், சிதம்பரம் வட்டத்திலுள்ள பேரம்பட்டிற்கு அருகில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ளத் தடுப்பு நீரொழிங்கி அமைத்தல் மற்றும் 10 இதர பணிகள் உட்பட நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் ₹284.70 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
 
ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து வசித்து வருபவர்களின் வீட்டுமனைகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 1.5லட்சம் குடும்பங்கள் பயன்படும்.
 
 
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் ஒன்று இந்த நிதி ஆண்டில் உருவாக்கப்படும்.
 
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பு உதவி தொகை வழங்கும் திட்டங்களுக்காக ₹3958 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை மாநகராட்சிக்கு விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டம் 8 மண்டலங்களில் 2 தொகுப்புகளாக திடக்கழிவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை ₹1,541.04 கோடி செலவில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் இடங்களை மீட்டெடுப்பதற்கும், கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டத்தை அரசு – தனியார் பங்களிப்பு முறையில் 5,710 கோடியில் செயல்படுத்தும் திட்டத்துக்கு அரசு அனுமதியளிக்கும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழஙகல் துறைக்கு ₹18,700.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிதியாண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய பயிர்களையும், பகுதிகளையும் சேர்க்க அரசு அறிவிக்கை செய்ய உள்ளது. குறிப்பிட்ட பகுதிக்குள் ஏற்படும் இடர்பாடுகளான ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளோடு இடி மின்னலுடன் கூடிய திடீர் மழை மற்றும் இயற்கை தீயினால் ஏற்படும் பாதிப்புகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இந்த காப்பீட்டு கட்டணத்தில் மாநில அரசின் பங்கு தொகைக்காக ₹621.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
சிவகங்கை கோட்டத்துக்கு விரிவுபடுத்தப்பட்ட செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின்கீழ், 622 கி.மீ சாலை பணிகள் ₹715 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின்கீழ் ஆசிய வளர்ச்சி, பன்னாட்டு வங்கிகளிடம் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறைக்காக ₹13,605.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
 
பொது வினியோக திட்டத்தின்கீழ் பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துக்கு ₹1000 வழங்கப்பட்டது. அதற்காக ஏற்கனவே ₹1,985 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த பட்ஜெட்டில் ₹6,000 கோடி உணவு மானியத்துக்காகவும், பொது வினியோக திட்டத்தை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்துவதற்கு நிதி உதவியாக ₹333.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சூரிய ஒளி மின்திட்டத்தை நபார்டு வங்கி நிதி உதவியுடன், ₹132.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
தமிழகத்தில் 37 அணைகள், அணை சார் கட்டமைப்பு, புனரமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை அணைகள் புனரமைப்பு, மேம்பாட்டு திட்டத்தின்கீழ் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 2021ம் ஆண்டு முதல் ₹610.26 ேகாடியில் செயல்படுத்தப்படும்.
 
இந்த நிதியாண்டில் 100.42 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மாநில அளவிலும், மண்டல அளவிலும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அதற்காக உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
 
வெள்ள பள்ளம், தரங்கம்பாடி, திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் ₹420 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் கட்ட அரசு அனுமதித்துள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் நீரோடி, மார்த்தாண்ட துறை, வில்லவிளை ஆகிய இடங்களில் ₹116 கோடியில் கடல் அரிப்பு தடுப்பாண்கள் அமைக்கப்படும். வரும் ஆண்டில் ஆழ்கடல் மீன்பிடி படகு குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 சேட்டிலைட் போன், 160 நேவ் டெக்ஸ் கருவிகளையும் அரசு வழங்கும்.