கோவை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசியை அகற்றாமல் அலச்சியமாகவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்துவரும் பிரபாகரன் மற்றும் மலர்விழி தம்பதிகளுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் அரசு மருத்துவமையில் குழந்தை பிறந்த மறுநாளில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் உடல்நலத்தில் வேறு ஏதாவது பிரச்னை இருக்கலாம் என பெற்றோர் அவ்வப்போது மருத்துவர்களை அழைத்து பார்த்துள்ளனர். ஆனாலும் குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில் மலர்விழி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிற்கு சென்ற ஓரிரு நாட்களில் குழந்தையின் கை வீங்கிக்கொண்டே வந்துள்ளது. அதன்பின் வீட்டினர் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட இடத்தை சோதித்து காரணத்தை உணர்ந்துள்ளனர்.
சிரஞ்சியில் இருந்த ஊசி குழந்தையின் கையிலேயே இருந்ததை அறிந்துகொண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு சென்று இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு குழந்தையின் கையில் இருந்த ஊசியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தற்போது சிசு நலமாக இருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்
செவிலியர்களின் அலட்சியத்தால் நடந்த இந்த விபரீதத்தை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர் கண்டித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இது போன்ற அலட்சியங்கள் அடிக்கடி நடந்துகொண்டே வருகிறது. சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.