குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திகளை மீண்டும் சேர்க்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் வீரசாகசங்கள் நடைபெறும். பின்னர் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களின் கலை, கலாச்சாரம், மற்றும் தனித் தன்மையை எடுத்துரைக்கும் வண்ணம் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம். டெல்லி ராஜபாதையில் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முக்கிய நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்திகள் அணிவகுத்து செல்லும்.
இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணங்களை முன்னிட்டு பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு விளக்கம் அளித்த ஒன்றிய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று கூறியது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஊர்திகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், அலங்கார ஊர்தி தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யாது என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ள ஒன்றிய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், ““தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது. ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு தேர்வு செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றிருந்தன. வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.