ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
டெல்டா வகை கொரோனாவை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் தினமும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்துகிறது. கொரோனாவை விட வேகமாக பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
வட மாநிலங்கள் சிலவற்றிலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு நபருக்குத்தான் தொற்று இருந்தது. இப்போது மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனாவை எதிர்த்து போராடியது போல் ஒமைக்ரானையும் எதிர்த்து போராடியே தீரவேண்டும். இந்த நேரத்தில் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு கவசம் தடுப்பூசிதான். எல்லோரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஒமைக்ரான் தொற்றை தவிர்க்கலாம்.
அதேபோல் கட்டாயம் முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்ற கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடித்தால் போதும். மீண்டும் ஊரடங்கு வராது. மக்கள் கட்டுப்பாட்டால் ஒமைக்ரானையும் கட்டுப்படுத்தி விடலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை- 26, மதுரை- 4, திருவண்ணாமலை- 2, சேலத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதியில் இன்னமும் டெல்டா வகை தொற்றாளர்கள் இருக்கும் நிலையில், ஒமைக்ரான் தொற்றும் பரவத் தொடங்கி உள்ளதால் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் போர்க்கால அடிப்படையில் அவசரகால மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
மாவட்டங்களில் 10 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்.
சரியான நேரத்தில் ஒமைக்ரான் பரவலை கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால் விரைந்து பரவிவிடும். எனவே உள்ளூரில் மாவட்ட அதிகாரிகள் தொற்றாளர்களை உன்னிப்பாக கையாள வேண்டும்.
திருமணம், இறுதிச் சடங்குகளில் பங்கேற்போரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அலுவலகம் வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.
ஒமைக்ரான் தொற்று இல்லாவிட்டாலும் இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். புதிய வகை கொரோனாவினால் லேசான பாதிப்பு இருந்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடும் போது பற்றாக்குறை ஏற்படுவதற்கான அபாயம் எழலாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.