ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடைேய நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீரின் தெற்குப்பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம், ரேபான் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை மத்திய ரிசர்வ் படையின் 178 பட்டாலியன் பிரிவு, ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவு ஆகிய படைகள் இணைந்து தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் இறங்கினர்.
தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்பு படையினர் நெருங்கியதும் அப்பகுதியில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ரேபான் கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 5 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் பாதுகாப்புப் படையினருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சனிக்கிழமை (ஜூன்.6) காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர், போமாய் கிராமத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டதில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி.பி கூறுகையில், “25 வயதான டேனிஷ் மன்சூர் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவரை, குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
டேனிஷ் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் என கூறப்படுகிறது. இதற்கிடையில், காவல்துறையினரும் ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க: தோல்வியடைந்த ஊரடங்கு இப்படித்தான் இருக்கும்- ராகுல்காந்தி கடும் தாக்கு