இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 2021, ஜனவரி 27 ஆம் தேதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் காவல் நிலையங்களில் நடக்கும் சித்ரவதைகளை தடுக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) பொருத்த உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் சித்ரவதை தொடர்பான வழக்கில், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின் போது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் குறித்த விபரங்களை அந்தந்த மாநில அரசின் வழக்கறிஞர்கள் எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்க இணைய வசதி அவசியமாகிறது. அங்குள்ள போலீஸ் நிலையங்களில் மின்சாரம், இணையவசதி வழங்குவதை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள், மாவட்டம் வாரியாக காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், அவை செயல்படுகின்றனவா? என்ற விவரம், அதேபோல, கண்காணிப்பு கேமராக்களை யார் கண்காணித்து, போலீஸ் அத்துமீறல், அராஜகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பான விவரங்கள் வேண்டும்.
கண்காணிப்பு கேமரா பதிவுகள் 45 நாட்களுக்கு மேல் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அதுதொடர்பான தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் ஒலிப்பதிவுடனான கேமரா பொருத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் என்ன என கேள்வி எழுப்பியதோடு, இந்த அனைத்து கேள்விகளுக்கான பதிலை உள்ளடக்கிய பரிந்துரைகளோடு கூடுதல் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான அமர்வு முன் இன்று (டிசம்பர் 02) விசாரணைக்கு வந்தபோது, “அனைத்து மாநில காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டல், உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி வருகிற 2021 ஜனவரி 27 ஆம் தேதிக்குள் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்திருக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் உறுதி செய்திருக்க வேண்டும். ஜனவரி 27 ஆம் தேதி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இடைப்பட்ட காலங்களில் கேமரா பொருத்துதல் செயல்பாடு குறித்து நீதிமன்றம் கண்காணிக்கும்” என்று உத்தரவிட்டனர்.
வெற்றிகரமாக 300 கி.மீ இலக்கை தாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை