இலங்கையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (32) என்பவர் அணிந்திருந்த ஷூ வித்தியாசமாக இருந்தது.
அவரது ஷூக்களை கழற்றி அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதன் அடிபாகத்தில் ரகசிய அறை வைத்து அதில் தங்க கட்டிகள், தங்க வளையம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மொத்தம் 300 கிராம் தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹9 லட்சம். இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட தயாரானது. அதில், பயணம் செய்ய வந்தவர்களை மத்திய வருவாய் புலான்வு துறையின் தனிப்படையினர் சோதனையிட்டனர். அப்போது, சிவகங்கையை சேர்ந்த செந்தில் அரசு (38) என்பவரது கைப்பையில் கட்டுக்கட்டாக அமெரிக்கா கரன்சி இருந்தது தெரிந்தது.
இதன் இந்திய மதிப்பு 40 லட்சம். பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்து கீழே இறக்கினர். பின்னர், செந்தில் அரசை, தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அப்போது, அவரது உள்ளாடைகளில் 40 லட்சம் அமெரிக்கா கரன்சி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 80 லட்சம் அமெரிக்கா கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அனைத்தும் ஹவாலா பணம் என்பது தெரிந்தது. இதையடுத்து, செந்தில் அரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.