மோடி பண மதிப்பிழப்பு அறிவித்த 24 நாட்களில் 34 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த விவகாரத்தில் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு செய்து அறிவித்தார். இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ 2000 நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அந்த காலகட்டத்தில் தொழிலதிபரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலருக்கும் நெருக்கமானவராக உள்ள சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய ரூ.2000 நோட்டுகளை வாங்கியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு சேகர் ரெட்டி, அவரது உறவினர் மற்றும் ஆடிட்டர் வீடு, அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் 147 கோடி ரூபாய்க்கு பழைய 500, 1000 நோட்டுகள், புதிய 2000 நோட்டுக்கள் மற்றும் 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது ஒன்றிய மோடி அரசு பண மதிப்பிழப்பு அறிவித்த 24 நாட்களில் 34 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் இரு வழக்குகளை முடித்துக் கொள்வதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே அமலாக்கத் துறையும் சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவில் தகுதியில்லை என கூறி அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்களது நியாயத்தை உயர் நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் தீர்ப்பு அளித்துள்ளதாகவும் அமலாக்கத் துறையின் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினித் சரண், ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 28.4.2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சதுர்வேதி, அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ் வி ராஜு ஆகியோர் வாதங்களை முன் வைத்தனர்.
இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் அந்த வழக்கில் இன்று (5.5.2022) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத் துறையின் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.