தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள்.

ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 110-ன் கீழ் பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு வெளியிடுகிறேன்.

‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையே அடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள், மானமும் அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார்.

அவர் நடத்திய போராட்டங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாத போராட்டங்கள். அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துக்கள். அவர் பேசிய பேச்சுக்கள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள். தமிழர் நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்.

தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனது எதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்த நடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர் நடத்திய மாநாடுகள், அவர் நடத்திய போராட்டங்கள் குறித்துப் பேச வேண்டுமென்றால் 10 நாள்கள் அவையை ஒத்திவைத்துவிட்டுப் பேச வேண்டும்.

பெரியாரின் குருகுல பயிற்சி தான் திமுகவை உருவாக்கியது. நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத பெரியாரால் தான் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியா முழுவதும் சமூகநீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதையே காரணம். மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானம்- இவை இரண்டும் தான் அவரது அடிப்படைக் கொள்கைகள்.

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும் தான் அவரது இலக்குகள். அந்த இரண்டுக்கும் எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவை அனைத்தையும் கேள்வி கேட்டார், அறிவியல் பூர்வமாகக் கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத் தூண்டினார்.

‘என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தை பெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்த காலம்தான்’ என்று நம்மையெல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். ‘பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’ என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார்கள். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது; எதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது.

இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

தந்தை பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம்; சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களைச் சமநிலையில் மதிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் பெரியாரின் வாசகங்கள் வெகுவாக பகிரப்பட்டு வருகின்ற்ன. மேலும் ட்விட்டரில் #socialjusticeday #periyar #பெரியார் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து போராட்டம்- திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவிப்பு