காற்றின் மேலடுக்கு சுழற்சி திடீரென இடம் மாறியதால், சென்னையில் நேற்று கனமழை பெய்தது. மழைப் பொழிவை துல்லியமாக கணிக்க, நவீன உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுவதால், நேற்றைய கனமழையைக் கணிக்க முடியவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று (30.12.2021) மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்ததால் சென்னை எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், அமைந்தகரை உள்பட நகரின் பல முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகலில் தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30 வரையில் பெய்ய வேண்டிய மழையின் அளவு என்பது 45 செ.மீ ஆகும். ஆனால், 71 செ.மீ மழை பெய்துள்ளது. இதில் அதிக அளவாக விழுப்புரத்தில் 119 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 74 சதவிகிதம் அதிகளவில் மழை பெய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒரேநாளில் பெய்த அதிக கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பெரியமேடு, ரிப்பன் மாளிகை, ஆழ்வார்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை ஆகியவற்றில் நடக்கும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “வானிலை ஆய்வு மையத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வரும். இந்தமுறை அவர்களே எதிர்பாராமல் மழை பெய்துள்ளது. மழை நிலவரத்தைத் துல்லியமாகக் கணிக்கும் இயந்திரங்களை வாங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கப்படும். மேலும் அடுத்த பருவமழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படம்” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே சென்னையில் இந்தளவுக்கு மழை பெய்யும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையமும் எந்த முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை. மிகப்பெரும் மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறிவிட்டது என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கனமழைக்கான காரணம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், “செயற்கைக்கோள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மழை பெய்வது குறித்து கணித்து அறிவிக்கப்படும். காற்றின் வேகத்தை துல்லியமாக கணிக்க இயலாது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, சில நேரங்களில் வேகமாக கடந்து விடும். அப்படி நகர்ந்ததால், சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதைக் கணிப்பது சற்று கடினமானது. இந்த நடைமுறைப் பிரச்னையால், நேற்றைய கன மழையைக் கணிக்க முடியவில்லை.
இந்த கனமழைக்கு மேக வெடிப்பும் காரணமில்லை. மேலும் மழைப் பொழிவை துல்லியமாக கணிக்க, நவீன உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன. இந்த மழைக்கு பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதலின் தாக்கம் காரணமா? என்கிற கேள்விக்கு, தற்போதுள்ள நிலையை மட்டும் வைத்து கணக்கிட முடியாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.