சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த இந்திரா பானர்ஜி. சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும் பொறுப்பு தலைமை நீதிபதியுமான தாகில் ரமணி நியமிக்கப்பட்டார்
புதிய தலைமை நீதிபதி தாகில் ரமணி கடந்த 2001 முதல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்தவர். சிவில், கிரிமினல் வழக்குகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் 3-வது பெண் தலைமை நீதிபதியாகியுள்ளார் தாகில் ரமணி.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி வி.நளினி மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள தாகில் ரமணிக்கு திங்கள் கிழமை காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு வழங்கப்படுகிறது.
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் 11.30 மணிக்கு தலைமை நீதிபதிக்கான முதல் டிவிஷன் பெஞ்சில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்குகிறார். டிவிஷன் பெஞ்சில் தலைமை நீதிபதியுடன் நீதிபதி எம்.துரைசாமி அமர்கிறார். இந்த டிவிஷன் பெஞ்ச் பொதுநல வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க உள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.