பிரதமர் மோடி, செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ என்ற 20 லட்சம் கோடி பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் நேற்று ஹிந்தியில் கூறிய ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ என்ற வார்த்தைக்கு தமிழில் ‘சுய சார்பு பாரதம்’ என்று அர்த்தம். இதனால் நாம் உலக நாடுகளிலிருந்து தனித்துவிட மாட்டோம். சுய சார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அதில், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் அளிக்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி, மே 31ம் தேதி வரை செலுத்தத் தேவையில்லை.
நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.4,200 கோடி கடனுதவி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மொத்த கடன் வரம்பில் ரூ .25,000 கோடி மதிப்புள்ள புதிய கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக மாநில அரங்களுக்கு ரூ.6,700 கோடி மூலதன உதவி வழங்கப்பட்டுள்ளது.
இடம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உணவு, குடிநீர் வழங்க வழிவைசெய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.11,000 கோடி வரையில் செலவிட்டுள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனா அதிகரிப்பு எதிரொலி- பயணிகள் ரயில் சேவையை மீண்டும் நிறுத்திய இந்தியன் ரயில்வே
மார்ச்.28 முதல் நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 14.62 கோடி நபர் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.87 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் 2.33 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.
கொரோனா காலத்தில் சுய உதவிக் குழுக்கள் சார்பாக 3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர்கள் தயாரித்து வழங்க சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு உதவியுள்ளது. மார்ச் 15, 2020 முதல் இவ்வாறாக 7,200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவிலான ஊதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுள்ளது. தற்போது குறைந்தபட்ச ஊதியச் சட்டமானது 30 சதவீதத் தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது.
ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியங்கள் சென்றடையும்.
‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். மார்ச் 2021க்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்க சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 50 லட்சம் வியாபாரிகள் பயனடைவார்கள்.
சிறு குறு நிறுவனங்கள் துறையினருக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் அரசு ஆதரவு வழங்கும். முத்ரா – சிஷு கடன் பிரிவில் ரூ.1,500 கோடி கடனுதவி கிடைக்கும். கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு 2 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படும்.
நகப்புற ஏழை மக்களுக்கும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் மலிவு வாடகை கொண்ட வாடகை வீடுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்காக குறைந்த வாடகை கொண்டு குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கித் தருவதற்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து சலுகை வழங்கப்படும்.
அனைத்து வகையான துறைகளிலும் பெண்களுக்கு இரவு பணி அனுமதிக்கப்பட வேண்டும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது கட்டாயம், என்பன உள்ளிட்ட இரண்டாம்கட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.