சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் சாதிவெறி ஒழிக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச ஆணவ கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு சாதி கட்டுப்பாடுகளை மீறியதாக ஒரு பெண் உட்பட 3 பேர் சுமார் 12 மணி நேரம் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த ஆணவக் கொலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பரில் அலகாபாத் விசாரணை நீதிமன்றம் 35 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பு கூறியது.
இதில் 2 பேரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், மற்றவர்களுக்கான தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதில் 8 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஷ்வரராவ், நீதிபதிகள் சஞ்ஜிவ் கண்ணா, கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை இதற்கு முன்னரே நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகள் தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். விசாரணை கறைபடிவதையும், உண்மை சாகடிக்கப்படுவதையும் தவிர்க்க சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் அதிகாரத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய வழக்குகளில் சாட்சிகளை பாதுகாப்பதில் அரசு முக்கிய பங்காற்ற வேண்டும்.
12 அரசு தரப்பு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக இந்த வழக்கில் மாறியுள்ளனர். சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறினாலும் அவர்கள் இயற்கையான சுயாதீனமான சாட்சிகளாக இருந்தால், குற்றம்சாட்டப்பட்டவர்களை பொய்யாக சிக்க வைப்பதற்கு எந்த காரணமும் இல்லையென்றால் அவர்களது சாட்சிகளை ஏற்றுக்கொள்ளலாம்.
எந்த அழுத்தம், அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக, நியாயமாக நீதிமன்றத்தில் சாட்சி கூறும் உரிமை இன்று கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது. சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கப்படாதது தான். இது மிகவும் மோசமான உண்மையாகும்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதிவெறி ஒழியவில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இந்த நாட்டில் கவுரவ கொலைகள் இன்னும் நிறுத்தப்படவிலலை. சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரமான குற்றங்கள் குறித்து கடும் கண்டனத்துடன் பதில் அளிக்க வேண்டிய நேரமாகும்.
சாதியின் பெயரால் அட்டூழியங்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை பரிந்துரைக்கப்படுகின்றது. சட்டத்தால் அனுமதிக்கப்படும் திருமணமான இளம் தம்பதிகளின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தில் பஞ்சாயத்தார் அல்லது சாதி பெரியவர்கள் தலையிடுவதற்கு உரிமை கிடையாது.
அம்பேத்கர் கூறியது போன்று கலப்பு மணம் தான் சாதியை ஒழிக்கும். இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் கண்ணியத்தின் நலன் கருதியும், சமூக அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் நலன் கருதியும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை தாமதிக்காமல் மாநிலங்கள் செயல்படுத்துவது அவசியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.