சீனாவின், பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம் கூட இந்தியாவுக்குத் தேவையில்லை, எங்களுக்கு அமைதிதான் வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியா – சீனா இடையே லடாக்கில் கடந்த மே 5ம் தேதி தொடங்கிய எல்லை பிரச்சனை பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இன்னும் முடிவிற்கு வரவில்லை. அதேபோல் இந்தியாவின் லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை இணைத்த புதிய வரைபடம் வெளியிட்டு நேபாளம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பாகிஸ்தானும் எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் தொடர்ச்சியாக பிரச்சனைகள் நிகழ்த்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து பாஜக சார்பில் ஜன் சம்வாத் கூட்டம் நடந்து வருகிறது. குஜராத் பாஜக தொண்டர்கள் மத்தியில் காணொலியில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மிகப்பெரிய சாதனை நாட்டில் அமைதியை நிலைநாட்டி, தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கி உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்தியதும், எல்லைப் பகுதியை வலுப்படுத்தியதுதான்.
பேச்சுவார்த்தை மூலம் உள்நாட்டு மட்டும் எல்லை பிரச்னையை சரி செய்வது தான் எங்களின் மிகப்பெரிய சாதனை ஆகும். அதோடு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத செயல்களையும் கட்டுப்படுத்தியது. நமது எல்லையில் ஒருபுறம் சீனா, பாகிஸ்தான் இருந்தாலும், நமக்குத் தேவை அமைதியும், வன்முறையில்லாத சூழலும்தான்.
மேலும் வாசிக்க: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து 1000 பேரை குணப்படுத்தியதாக பதஞ்சலி பகீர் தகவல்
வங்கதேசப் போரின் போதுகூட, போரில் வென்றபின், அந்நாட்டின் பிரதமராக முஜிபுர் ரஹ்மானை அமரவைத்துவிட்டு இந்திய ராணுவம் திரும்பிவந்துவிட்டதே தவிர அந்நாட்டைக் கைப்பற்றவில்லை. இந்தியா எப்போதும் தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டு தன்னை வலிமையானதாகக் காட்டிக்கொள்ளாது.
அண்டை நாடுகளான பூடான், சீனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றின் ஒரு அங்குல நிலத்தைக்கூட இந்தியா விரும்பியதில்லை, தேவையும் இல்லை. நமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு, பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுதல் என்று கூறியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பிரச்சினை நீண்ட நாட்கள் நீடிக்காது. நாம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கிறோம். எனவே எதிர்மறையான சிந்தனைகளை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Trackbacks/Pingbacks