ஆப்பிள் நிறுவன போன்களைப் பயன்படுத்தும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சீனாவின் ஹுவாய் நிறுவனத்திற்கு ஆதரவாக, பல சீன நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
 
உலக அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் முன்னணி நிறுவனமான ஹுவாய் களமிறங்கியுள்ளது. இரு நிறுவனங்கள் தொடர்பான சில வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையிவ் உள்ளன.
 
இந்நிலையில் ஹுவாய்நிறுவன தலைமை நிதி அதிகாரியும், அதன் உரிமையாளரின் மகளுமான மெங், அண்மையில் கனடா சென்றிருந்த கைது செய்யப்பட்டார்.
 
ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தபோது, அதை மீறி அந்நாட்டுக்கு உதவியிருக்கிறார் மெங். இதைத் தெரிந்து கொண்ட அமெரிக்கா, அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் கைது செய்யப் போவதாக எச்சரித்திருந்தது. அதன்படியே அவர் கனடா சென்றிருந்த சமயத்தில் கைது செய்யப்படதாக தகவல்கள் தெரிவித்தன.
 
சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஹுவாய் நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்கு மெங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பணியில் சேர்ந்தது முதல், ஏற்றத்தை சந்தித்து வந்த மெங்குக்கு, தற்போது அமெரிக்காவால் முதல் முறையாக சரிவு ஏற்பட்டிருக்கிறது
 
அதேசமயம் மெங்கை கைது செய்தது மனித உரிமை மீறல் என சீனா கண்டித்துள்ளது. மேலும், தனது நாட்டில் உள்ள கனடா மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை அழைத்து மெங்கை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
 
அத்துடன் மெங்குக்கு எதிராக அமெரிக்கா பிறப்பித்த கைது வாரண்டையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது.
 
 
அதேசமயம் மெங் கைது நடவடிக்கைக்கு எதிர்வினையாக கனடாவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்போவர் என்னும் தொழிலதிபரையும், மைக்கேல் கோவ்ரிக் என்னும் முன்னாள் தூதரக அதிகாரியையும் சீனா சமீபத்தில் கைது செய்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவன போன்களைப் பயன்படுத்தும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சீனாவின் ஹுவாய் நிறுவனத்திற்கு ஆதரவாக, பல சீன நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. .
 
இதுதொடர்பாக நிக்கேல் ஏஷியன் ரிவ்யூ எனும் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
 
பெரும்பாலான சீன நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் ஹுவாய் நிறுவனத்திற்கு உதவும் வகையில், அந்நிறுவன போன்களை வாங்கினால் அவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன.
 
சில நிறுவனங்கள் போனின் விலையில் 10 முதல் 20 சதவீதமும், சிலரோ முழுமையாகவுமோ மானியம் தரத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன.
 
இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளிப்படையாக தங்களது சமூக வலைதள பக்கங்களில், இனி ஹுவாய் நிறுவன பொருட்களை வாங்குவது அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.
 
ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று, இனி ஆப்பிள் நிறுவன போன்களைப் பயன்படுத்தும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சீனாவின் ஹுவாய் நிறுவனத்திற்கு ஆதரவாக வெளிப்டையாகத் தெரிவித்துள்ளது.
 
இதன்காரணமாக அந்நிறுவனதிற்கு உள்ளூர் ஆதரவு அதிகரித்து வருகிறது.