சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே உள்ள கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இத்லிப் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இதனை இலக்காக கொண்டு, தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் பஷார் அல் ஆசாத் எச்சரிக்கை செய்து வந்துள்ளார்.
மேலும் இப்பகுதிக்கு தென்மேற்கே கடந்த வியாழ கிழமை ராக்கெட் வெடிகுண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளான நேற்றும் சற்று கிழக்கை நோக்கி முன்னேறி சென்று வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்களில் 11 பேர் பலியாகி உள்ளனர் என சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து தெற்கு பகுதியில் வான்வழியே ரஷ்ய போர் விமானங்களின் தாக்குதல் மற்றும் சிரிய ஹெலிகாப்டர்களின் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
சில மணிநேரங்களுக்கு பின் அலெப்போ பகுதிக்கு அருகே கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதி மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் மூலம் மட்டுமே சிரியாவின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் மீது நடந்த தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.