இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும், 280க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. மேலும் நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 6 பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் புதிதாத மேலும் இரு இடங்களில் குண்டு வெடித்து பலர் பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் நிலைமை கட்டுக் கடங்காத நிலையிலேயே உள்ளது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நெட்வொர்க் சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு மற்றும் அமைதி இல்லாத நிலை குறித்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களின் வருத்தங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை ராதிகா, “அட கடவுளே இலங்கையில் குண்டு வெடிப்பு… நான் கொழும்புவின் சின்னமோகன் கிராண்ட் ஹோட்டலில் தான் தங்கி இருந்தேன். சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அங்கிருந்து கிளம்பினேன். என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியில் இருக்கின்றேன்” என பதிவிட்டுள்ளார்.