சிவகார்த்திகேயன் நடித்து, தயாரித்துள்ள படம் “கனா”. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில், சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவருடைய தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது.
இதையொட்டி நேற்று சென்னையில் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “பொதுவாக சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் டிவியில் ஒளிப்பரப்பாகும் பட புரோமோஷன் நிகழ்ச்சியில், ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பாராட்டும் போது, அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் சேனலை மாற்றிவிடுவர்.
அதுவும் ப்ரிவியூ தியேட்டரில் ஒரு படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது பொய் சொல்ல வேண்டியிருக்கும். அதற்காக படம் முடியும் முன்பே என்ன பொய் சொல்லலாம் என யோசிக்க தொடங்கிவிடுவேன். இதுபோல் கடந்த 40 ஆண்டுகளில் நான் சொன்ன பொய்களுக்கு அளவே இல்லை.
கனா படத்தை பொறுத்த வரை ஐஸ்வர்யா ராஜேஷ் நிஜ கிரிக்கெட் வீராங்கனை போலவே நடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த நிஜ கிரிக்கெட் வீராங்களைகளுக்கும் அவருக்கும் வித்தியாசமே தெரியவில்லை.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டைவிட்டு வெளியே வரும் போது, அவருக்கு பின்பக்கம் பெரியார் படத்தை வைத்திருப்பார்கள். அதற்காக இயக்குனர் அருண்ராஜா காமராஜுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தங்கல் படத்தைப் போல் கனா படமும் சீனாவில் ஜெயிக்க வேண்டும்” என வாழ்த்தினார்.